Tuesday, October 2, 2012

டெசாரு கடற்கரை விடுதி - 18


ஜொகூர் மாநிலத்தின் டெசாருவில் கட்டப்பட்ட ’டெசாரு’ கடற்கரை பொழுது போக்கு விடுதிதான், ரேனா சகோதரர்களுக்கு முத்தாய்ப்பு வைக்கிறது. பல கோடி ரிங்கிட் செலவில் கட்டப்பட்டது. மிக ஒய்யாரமான தளம். 793 அறைகளைக் கொண்டது. குழந்தைகளுக்கான உல்லாச உலகம் எனும் பொழுது போக்கு மையம் 14 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. அனைத்தும் உலகத் தரம் வாய்ந்தவை. 

லோட்டஸ் டெசாரு

மிக அண்மையில் ரேனா சகோதர்களின் கெட்கோ நில அன்பளிப்பு வியப்பில் ஆழ்த்துகிறது. பல கோடி மதிப்புள்ள நிலங்களை, அங்குள்ள இந்தியர்கள், மலாய்க்காரர்கள், சீனர்களுக்கு லோட்டஸ் குழுமம் அன்பளிப்பு செய்துள்ளது. அவர்களுடைய கொடை நெஞ்சம் நம்மை எல்லாம் மெய் சிலிர்க்க வைக்கிறது. சபாஷ் ரேனா! சபாஷ் ராமா! சபாஷ் நாகா! 

டெசாரு தங்கும் விடுதியின் முன்தோற்றம்

மலேசிய இந்தியர்களுக்கு ஒரு பெருமையின் சின்னம் ரேனா துரைசிங்கம். அவருடைய சகோதரர்கள் ராமலிங்கமும் நாகசுந்தரமும் அவரின் நம்பிக்கைத் தூண்கள். மண்ணினின் மைந்தன் ரேனாவிற்கு நம்முடைய வாழ்த்துகள். 

முயற்சி செய்தால் முன்னேறலாம். When right, keep it right. When wrong, make it right! சரி என்றால் சரியாக வைத்திரு. தவறு என்றால் சரியாக அமைத்துவிடு எனும் ரேனாவின் பொன்மொழி, வையகம் போற்றும் ஒரு பொய்யாமொழி!

அம்பானியுடன் கூட்டு முயற்சி - 17


ந்தியாவில் அம்பானி என்பது ஒரு பெரிய கோடீஸ்வரக் குடும்பம். அவர்களுடன் 2008ஆம் ஆண்டு ரேனா துரைசிங்கம் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து Big Cinemas Lotus Five Star எனும் ஒரு கூட்டுக் குழுவையும் உருவாக்கினார். இந்தக் குழுமம் இந்திப் படங்களைத் தயாரித்து வருகிறது.

பிரிக்பீல்ட்ஸ் தங்கும் விடுதி

ஒரு நிறுவனத்தை வெற்றிகரமான நிலையில் நீடித்து வைத்து இருக்க வேண்டும் என்றால், ஓர் அடிப்படைத் தத்துவத்தைப் பின்பற்ற வேண்டும். அதற்குப் பெயர் ‘பல்வகைப்படுத்துதல். ஆங்கிலத்தில் Diversify என்று சொல்வார்கள். ஒரு நிறுவனத்தில் இருக்கின்ற ஒரு துறையில் சரிவு என்றால் இன்னொரு துறை, சரிந்து போகும் துறையைத் தூக்கிவிடும். ஆக, இந்தப் பல்வகைப்படுத்தும் தத்துவத்தின் கீழ் லோட்டஸ் குழுமமும் இறங்கியது.

லோட்டஸ் தங்கும் விடுதி லிட்டல் இந்தியா

2002ஆம் ஆண்டில் ஓட்டல் தொழில்துறையிலும் கால் பதித்தது. கோலாலம்பூர் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலையில் இருந்த மதுரா இன், காவ்லூன் ஓட்டல் ஆகிய இரண்டையும் கொள்முதல் செய்தது. அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து மேடான் துங்குவில் 90 அறைகள் கொண்ட Lotus Family Hotel எனும் தங்கும் விடுதியைக் கட்டியது. இதுதான் அவர்களின் முதல் விடுதி.

லோட்டஸ் திரையரங்க உணவகம்

தலைநகர் பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான், மஜீத் இந்தியா போன்ற இடங்களில் அவர்களுடைய தங்கும் விடுதிகள் உள்ளன. சராசரி குடும்பத்தினர் வசதிக்கு ஏற்றவாறு வாடகைக் கட்டணங்களும் மலிவாக உள்ளன. ஈப்போ, சித்தியவான், கூச்சிங் போன்ற இடங்களில் மேலும் சில தங்கும் விடுதிகள் கட்டப்படவிருக்கின்றன.

35 நகரங்களில் 200 திரையரங்குகள் - 16


ணிகத் துறையில் வலிமையாக இருப்பதோ, பெரிதாக இருப்பதோ முக்கியம் இல்லை. அறிவு ஜீவியாக இருப்பதும் முக்கியம் இல்லை. ஆனால், மாற்றங்களுக்கு மதிப்பையும் முக்கியத்துவத்தையும் கொடுப்பதே அதி முக்கியம் என்கிறார் ரேனா துரைசிங்கம். அதைத்தான் இன்னும் அவர் செய்து வருகிறார். 


லோட்டஸ் பைவ் ஸ்டார் திரையரங்கு

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் எனும் பாடல் இருக்கிறது. அந்தப் பாடல் ரேனாவைக் கிண்டலடித்தவர்களுக்குச் சரியாகப் பொருந்தும். அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. 


கவிஞர் வைரமுத்து, நடிகர் விஜய், பரத்

இப்போது மலேசியாவின் 35 நகரங்களில், ஏறக்குறைய 200 திரையரங்குகளுக்கு ரேனாவின் சகோதரர்களும் கருணாவும் சொந்தக்காரர்களாகி விட்டார்கள். தவிர, உள்நாட்டிலும் சிங்கப்பூர், புருணை, இந்தோனேசியா, இந்தியா, ஹாங்காங் போன்ற வெளிநாடுகளிலும் திரைப்படங்களைத் தயாரித்து வருகின்றனர்.

திரைப்படங்கள் தயாரிப்பு - 15


காலம் அறிந்து செய்யப்பட்ட உதவி ஞாலத்திலும் பெரிது என்பது வள்ளுவர் வாசகம். அந்த வாசகத்தைக் கருணாமூர்த்தி மறக்கவில்லை. ரேனாவைச் சினிமாத் துறையில் இழுத்துக் கொண்டார். இருவரும் சேர்ந்து Lotus Five Star நிறுவனத்தைத் தோற்றுவித்தனர். அதன் பின்னர் அவர்கள் இந்தியத் திரைபடங்களை மட்டும் விநியோகம் செய்யவில்லை. மலாய், ஆங்கில, சீனப் படங்களையும் விநியோகம் செய்யத் தொடங்கினர். செய்தும் வருகின்றனர். தமிழ்ப்படங்களையும் தயாரிக்கின்றனர். 

கோலாலம்பூர் கத்தே சினிமா

‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ எனும் திரைப்படத்தை இவர்கள்தான் தயாரித்து வெளியிட்டார்கள். இன்னும் சில படங்கள் பட்டியலில் உள்ளன. 

முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு

ரேனா துரைசிங்கம் திரையுலகில் காலடி வைத்தபோது ’உனக்கு என்ன பைத்தியமா புடுச்சி போச்சு…. அவனவன் சினிமா தியேட்டர்கங்ல இழுத்து மூடிட்டு… அங்காடிகங்களைத் தொறக்கிறாய்ங்க... நீ என்னடானா… புதுசு புதுசா தியேட்டர்ங்கல தொறக்கிற... உருப்பட்ட மாதிரிதான்… கரை சேர மாட்டே…’ என்று சில நண்பர்கள் நக்கல் செய்தனர். ஆனால், ரேனாவின் போக்கு வேறு மாதிரியானது. It is not the strongest or the biggest that survives in business, nor the most intelligent, but the one most responsive to change என்று அவர்களுக்குச் சொன்னார்.

சினிமாத் துறையில் - 14


காலப் போக்கில், உணவகத் துறையில் இருந்து சினிமாத் துறையில் காலடி எடுத்து வைத்தனர். அது ஒரு பெரிய கதை. நட்பு என்பது நாகரிகமானது என்று சொல்வார்கள். உண்மையிலேயே அந்த நாகரிகம் புனிதமானது. அப்படிப்பட்ட ஒரு புனிதம்தான் ரேனாவைச் சினிமாவின் பக்கம் ஈர்த்தது. அவருக்கு ஒரு பால்ய நண்பர் இருந்தார். அவருடைய பெயர் கருணாமூர்த்தி. அவர்தான் சினிமாத்துறைக்கு ரேனாவின் வழிகாட்டியாக அமைந்தார். 

லோட்டஸ் உணவகம்

1980களில் Five Star Trading என்பது பிரபலம் இல்லாத நிறுவனம். இந்தியத் திரைப்படங்களை மட்டுமே விநியோகம் செய்து வந்தது. தலைமைப் பதவியில் கருணாமூர்த்தி என்பவர் இருந்தார். இவருக்கு சினிமாத் துறையில் 30 ஆண்டுகால அனுபவம் இருந்தது. 

லோட்டஸ் உணவக நுழைவாயில்

அந்தக் கட்டத்தில், இந்திய உணவு தயாரிப்புத் துறையில், லோட்டஸ் குடும்ப உணவக நிறுவனம் புகழின் உச்சியில் இருந்தது என்றே சொல்ல வேண்டும். மழை பெய்தால் வெயில் அடிக்கும் அல்லவா. அந்த மாதிரி ஒரு கட்டத்தில் கருணாமூர்த்தியின் பைவ் ஸ்டார் நிறுவனத்திற்கு சற்றே நிதி நெருக்கடி. ரேனா தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தார்.

ஜெய விலாஸ் - 13


ந்தையார் இறந்த பிறகு ரேனாவின் குடும்பம், 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம், கோலாலம்பூருக்குப் புலம் பெயர்ந்தது. ஜாலான் மாஸ்ஜீத் இந்தியாவில், ஓர் உணவகத்தைத் திறந்தார்கள். அதன் பெயர் ஜெய விலாஸ். அதுதான் லோட்டஸ் குழுமத்தின் தெய்வீகச் சுழி. முதல் உணவு விடுதி.

அடுத்து, 1990இல் லோட்டஸ் குடும்ப உணவகம், பெட்டாலிங் ஜெயா ஜாலான் காசிங்கில் திறக்கப்பட்டது. அதன்பிறகு, கிள்ளான் பள்ளத்தாக்கில் படிப்படியாக 15 உணவகங்கள் திறக்கப்பட்டன. பின்னர், காசிங் ஸ்டோர்ஸ் எனும் பெயரில் ஒரு நவீனமான சூப்பர் மார்க்கெட்டைத் திறந்தார்கள்.

1993இல் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப நிறுவனமான சோனி, தன்னுடைய தொலைக்காட்சிப் பெட்டிகளை விற்பனை செய்வதற்கு, லோட்டஸ் குழுமத்திற்கு உரிமம் வழங்கியது. அதன் பிறகு, ரேனா சகோதரர்களுக்கு எல்லாமே ஏறுமுகம்தான்.